"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, December 23, 2010

இனிய பயணம் - கேதர்நாத்க்கு..15

பிரகாரத்தைச் சுற்றி வந்த பின் கோவிலின் இடதுபுறம் வெளியே உள்ள சிவபிண்டா எனப்படும் ஜோதிர்லிங்கத்தைத் தரிசனம் செய்தோம். வெண்மைநிறத்திலான லிங்கம் அதன் வடிவம் என்ன எனத் தெரியவில்லை. அனேகமாக பிரபஞ்சவடிவமாக இருக்கலாம் (நீ போய் பாத்தியான்னு அங்க யாரு கேட்கிறது) கோவிலின் ஆராவாரமில்லாமல், மிக அமைதியான இடமாக இருந்தது. கண்ணை மூடி உட்கார நேரம் போனதே தெரியவில்லை. (யாரது அது நல்ல தூக்கமான்னு கேட்கிறது)




கேதார்நாத் கோவில் சென்றதன் பலன் இங்கே கிடைத்தது என்றால் அது மிகையில்லை. வெளியே மழை தூறல் விழ கீழே வந்தோம். வெளியே ஆதிசங்கரரின் அடையாளமாக இதோ தண்டத்தின் அடையாளம்.



கோவிலின் பிண்ணனியில் இருந்த மலைகளில் பனி படர்ந்து இருந்தது. ஆனால் மேகங்கள் சூழ்ந்து இருந்ததால் பார்க்க முடியவில்லை. ஆனால் கீழே இறங்கி வரும்போது பார்க்கமுடிந்தது.




நால்வர் தூக்கும் டோலி:) இவர்கள் ஒரு இராணுவ ஒழுங்குடன் இணைந்து நடந்து வருகிறார்கள். வயதானவர்கள், நடக்க குதிரையில் அமர இயலாதவர்கள் இதில் நடந்து வருகின்றனர்.


மழை பிடித்துக்கொள்ள அனைவரும் கீழே இறங்க ஆரம்பித்தோம். குதிரையில் ஏறி வந்ததால் ஏற்கனவே பின்பக்கம் எல்லாம் வலி எடுத்தது. திரும்பும்போது குதிரையில் ஏறி அமர்ந்து கொஞ்ச தூரம் போனவுடனே மீண்டும் வலியெடுக்க, சட்டென கீழிறங்கி நடக்க ஆரம்பித்துவிட்டேன். குதிரை பின்னாலாயே வெறுமனே வர 7 கீமி நடந்து வந்தேன். அதன் பின்னர் மீண்டும் குதிரையில் ஏறி வந்தேன். என்னோடு வந்த சிலர் குதிரையை வேண்டாம் என திருப்பி அனுப்பி விட்டு பின்னர் நடக்க சிரமப்பட்டனர். எனவே குதிரையை பயணத்திற்கு பேசி, தொடர்ந்து பயணம் செய்யுங்கள். அதன் மீது தேவைப்படும்போது ஏறிக்கொள்ளலாம்.

வழியில் குதிரைக்காரனுக்கு ஒரு ஜோடி கிடைத்துவிட அவன் என்னைக் கண்டு கொள்ளவில்லை. நானே குதிரையும் ஓட்டிக்கொண்டு ராம்பாரா வந்து சேர்ந்தேன், இந்த குதிரைகளை மட்டக்குதிரை அல்லது கோவேறு கழுதை என்று சொல்ல எனக்கு மனம் வரவில்லை. காரணம் மலைப்பதையில் ஆங்காங்கு சுமார் மொத்தம் ஐந்தாறு இடத்தில் மட்டும் இவைகள் பாத்ரூம் போவதெற்கென்று தனி இடங்கள். இவை அந்த இடங்களில் மட்டுமே ஒதுங்கி நின்று சிறுநீர் கழிக்கின்றன. மனிதர்கள் எங்கு செளகரியமோ அங்கு:))

குதிரையின் மீது அமர்ந்த வயதான பெண்மணி ஒருவர் திடீரென குதிரை இழுத்த இழுப்புக்கு மேலே அமர்ந்தபடி ஈடுகொடுத்து சமாளிக்கத் தெரியாமல் தடுமாறி ஒருபுறமாக சாய, குதிரை ஒரு புறமான சுமையைச் சமாளிக்க இயலாமல் முன்னே நடந்து கொண்டிருந்த பெண்மணிமீது கடுமையாக உரசியது. அவர் தைரியமாக நகர்ந்திருக்கலாம். ஆனால் சினிமாவில் வருவது போல் கத்திக்கொண்டு நிற்க, குதிரை மேலே உரசிவிட்டது. ஆக நடந்து சென்ற அந்த அம்மா கீழே விழுந்துவிட்டார்கள்:(

நான் குதிரைக்காரனை சத்தமிட அவன் ஓடி வந்து தொங்கிக்கொண்டிருந்த இந்த அம்மாவை தூக்கி வைத்துக்கொண்டான். விழிப்புணர்வுடன் இல்லையென்றால் இது சாதரணம். ஆகவே பயணம் செல்வோர்கள் இயல்பாக பயமின்றி இருந்தால் பயணம் எளிது. பயப்பட்டால் கடினம்தான்.

குதிரைக்காரனிடம் கீழே இறங்கிவந்து பணத்தைக் கொடுத்துவிட்டு, பேருந்துக்குத் திரும்ப எத்தனித்தோம். அப்போது பார்த்தால் குதிரைக்காரனின் அடையாள அட்டை எங்களிடம். நண்பர் அது பற்றி முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் நான் அவன் தொழில் செய்ய இந்த அட்டை அவசியம். திருப்பிக் கொடுத்துவிடுவோம் என திரும்பிச் சென்று அவனை தேடிக்காண்டு பிடித்தேன். அவனோ கடலை போடும் மும்முரத்தில் இந்த அட்டையப் பற்றி ஞாபகமே இல்லாதவனாக இருந்தான்.

அட்டையை பார்த்து, பதறி அடித்துக்கொண்டு காலைப் பிடிக்காத குறையாக நன்றியைத் தெரிவித்தான். எங்களுக்கும் மனம் நிறைவாக இருந்தது. கடலைபோட்டவனுக்கு எங்களால் ஆன உதவி என மகிழ்ந்து கொண்டே பேருந்தில் ஏறினோம். ஒருமணி நேரத்தில் குப்தகாசிக்கே திரும்பி வந்து சேர்ந்தோம்.

மறுநாள் காலை 6.00 மணிக்கே கிளம்பிவிட்டோம். மாலை 3 மணிக்குள் ரிஷிகேஷ் திரும்பும் வழியில் உள்ள அகஸ்தியர் குகை செல்வதால் திட்டம். வரும் வழியில் மண்சரிவில் சிக்கிய லாரியைப் பார்த்துக்கொண்டே வந்தோம். வழியில் பள்ளி செல்லும் மாணவர்களைப் பார்த்தோம் !!



அதைத் தொடர்ந்த பயணத்தில் வழியில் பயணம் மண்சரிவால் தடைபட்டது. நல்லவேளையாக பாதை சீர் செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது. சீர்செய்வது என்றால் முழுப்பாதையும் செப்பனிடுவது அல்ல. புல்டோசரே வந்தும் ஒரு பேருந்து செல்லும் அளவுக்கு மட்டும் அளவாக சரி செய்தனர். அதில் மண்வெட்டி பயன்படுத்தும்போது ஈரமண்ணை எடுக்க கடினமாக இருப்பதால் மண்வெட்டியில் கயிறு கட்டி இன்னொருவர் ஒத்துழைப்புடன் மண்ணை வாரி எறிகின்றனர்.




அங்கு அரைமணிநேரம் காத்திருந்தோம். அந்த நேரத்தில் டிபனை முடித்துவிட்டோம்.பாதை சீர் செய்யப்பட்டது. திட்டமிட்டபடி மாலை அகத்தியர் குகை வந்தடைந்தோம். அங்கே கங்கையில் இயற்கை வைத்தியர் அறிவுரைப்படி சிறு கற்களுகு இடையே இருந்த பாறை மண்ணை எடுத்து உடல் முழுவதும் பூசி, நன்கு காய்ந்தபின் கங்கையில் குளியல் போட்டோம்.




நன்கு குளித்துவிட்டு, மலையில் இருந்து இறங்கிய, நீண்டதூரத்தின் பயணக்களைப்பு ஓரளவு நீங்க புத்துணர்ச்சியோடு கரையில் இருந்த அகத்தியர் குகையினுள் சென்று தியானத்தில் ஈடுபட்டோம்.




குகையினுள் சுமார் 20 பேர் அமரலாம். உள்ளே பாறையின் உட்புறம் குடைந்து உருவாக்கப்பட்டதோ, இயற்கையானதோ தெரியவில்லை. உள்ள இருந்த பாறையின் மணம் அமைதியான சூழ்நிலை என அந்த இடத்தில் இருந்ததே சொல்ல இயலாத மாற்றங்களை மனதில் ஏற்படுத்தியது. எங்களுக்கு முன்னதாக ஓம்காரம் மந்திரம் ஜெயித்து தியானத்தில் இருந்த வெளிநாட்டவர் எங்கள் கூட்டத்தை கண்டவுடன் வெளியேறி விட்டனர். தியானத்திற்கு உகந்த இடத்தை சுற்றுலாத் தலம் போல் நம்மவர்கள் பார்த்து, சப்தமிட்டுக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்ததால் அவர்கள் வெளியேறினர்.

ஒருமணிநேரத்திற்குமேல் அங்கே அனைவரும் பகுதிபகுதியாக சென்று தியானத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன் பின் கிளம்பி மாலை ரிஷி கேஷ் வந்து திருக்கோவிலூர் மடத்திலேயே தங்கினோம். நல்ல ஓய்வு எல்லோருக்கும் வீடு திரும்பும் எண்ணமும் வந்துவிட்டது. அடுத்த நாள் மதியம் வரை ஓய்வுதான். பின்னர் மதிய்த்திற்கு மேல் ஹரித்துவார் பார்த்துவிட்டு வர திட்டம்.


பயணம் அடுத்த பாகத்தில் நிறைவு பெறும்..:))

நிகழ்காலத்தில் சிவா

2 comments:

  1. புகைப்படங்கள் நேரில் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கிறது.

    ReplyDelete
  2. ஏன் அடுத்த பதிவுக்குள் முடித்தே ஆக வேண்டுமா?

    எடுத்த படங்களை சில பதிவுகளில் குறிப்பாக எழுதலாமே?

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)