"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Saturday, April 18, 2009

ஸ்வாமி ஓம்காரும்.... எலி ஆராய்ச்சியும்.....

ஒரு விஞ்ஞானி, எலிகளை ஆராய்ச்சி செய்பவர். தன் ஆராய்ச்சிக்காக பல எலிகளை வைத்து, பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.

எலிகளை மனிதன் தன் கட்டளைப்படி கேட்கச் செய்யமுடியும் என தீவீரமாக நம்பினார். அது சம்பந்தமாக அவருடைய ஆய்வின் போக்கு அமைந்திருந்தது.

முதலில் அதை உணவு விசயத்தில் பழக்க முடிவு செய்தார். அதற்கு பல்வேறு விதமான ஒலிகளை எழுப்பி, எலியை, அந்த கட்டளைக்கு கீழ்படியப் பழக்கினார். ஒன்றும் பலன் இல்லை. அது தன் இஷ்டப்படி, அவ்வப்போது கூண்டை விட்டு வெளியே வருவதும் உள்ளே போவதுமாக இருந்தது.

சரி இது ஆகாது என முடிவு செய்து, உணவு கொடுக்கும் நேரங்களை மாற்றி அமைத்துப் பார்த்தார்.சில சமயங்களில் எலி வந்து உணவை எடுத்துக் கொண்டது. சில சமயங்களில் உணவு சாப்பிடவில்லை.

சரி இதுவும் ஆகாது, என முடிவு செய்து தானியங்கி ஒலி எழுப்பும் மணி ஒன்றை நிறுவினார்.உணவுநேரத்திற்கு முன் மணியை ஒலிக்க செய்தார். மணி சப்தம் கேட்டவுடன் எலிக்கு தவறாமல் உணவு வைத்தார். ஓரிரு நாட்களில் எலி கொஞ்சம் கொஞ்சமாக உணவு எடுத்துக்கொண்டது. பின்னர் தொடர்ந்து எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டது.

கிட்டதட்ட ஒரு மாத காலம் இதற்கு ஆனது. இறுதியாக தனது ஆராய்ச்சி குறிப்பில் விஞ்ஞானி இவ்வாறு எழுதினார்.

எலி எந்த சப்தத்திற்கும் கீழ்படியாது. மணி சப்தத்திற்கு மட்டுமே கீழ்படியும். இதுவே நான் கண்ட உண்மை என நிறைவு செய்தார்









அன்று இரவு புதிதாக வந்த எலி ஒன்று நமது எலியிடம், என்ன அண்ணே! எப்படி இருக்குது இந்த வாழ்க்கை, விஞ்ஞானி நல்லவரா? எனக் கேட்டது.

அட அத ஏன் கேட்கிற? ஒரு மாசமா இந்த ஆள்கிட்ட நா பட்டபாடு, ! பசிக்கிற நேரத்துக்கு ஒழுங்கா சாப்பாடு வைக்கத்தெரியல. ஒரு வழியா மணி அடித்தவுடன் சாப்பாடு வைக்கிற மாதிரி பழக்கறதுக்குள்ள எனக்கு தாவு தீர்ந்து போச்சு போ! என்றது.

நண்பர்களே பலசமயங்களிலும் நாம் எலியாகவோ அல்லது விஞ்ஞானியாகவோ இருக்கிறோம்.

உலகத்தை நாம் புரிந்து கொள்வதும், உலகம் நம்மை புரிந்து கொள்வதிலும் இந்த நிலைதான் இருக்கிறது.

சரி இதற்கும் ஓம்காருக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

இப்போதைக்கு நான் எலி, ஓம்கார் விஞ்ஞானி

மீண்டும் அவசியம் சந்திப்போம்.

அடுத்த இடுகையின் தலைப்பு

உலகின் ”மோச”மான வியாபாரம் (ஜோதிடம் அல்ல)


Tuesday, April 14, 2009

மனநல காப்பகமும் ...அரசியல்வாதியும்...

புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் அருகே ஊத்துக்குளி ரோடில் உள்ள S.பெரியபாளையம் ஊரில் அமைந்துள்ள ’கருணை இல்லம்’அமைப்பிற்கு சென்றிருந்தோம்.

அங்கே உடல் ஊனமுற்றவர்,மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் என மொத்தம் 72 நபர்கள் தங்கவைத்து பராமரிக்கப் படுகின்றனர். அதன் நிறுவனரே நிர்வாகியாக இருக்கிறார். குடும்பமே அந்த சேவையில் ஈடுபட்டு உள்ளது.

காப்பகத்தில் இருக்கும் சூழ்நிலைகள் ரம்யாவின் ஐம்பதாவது பதிவை படித்து புரிந்து கொள்ளுங்கள்.

நான் சில காப்பகங்களுக்கு குழந்தைகளின் பிறந்தநாட்களை முன்னிட்டு ஒருநாள் செலவினை அன்போடு வழங்கிவருவது வழக்கம். நான் பார்த்தவரை ஓரளவிற்கு எல்லா இல்லங்களுமே அருள்கொடையாளர்களின் நன்கொடைகளால் நன்கு பராமரிக்கப்பெற்று இருந்தன.

விசயமே இனிமேல்தான்...

ஆனால் இந்த கருணைஇல்லமோ தகுந்த விளம்பரம் இல்லாததாலோ என்னவோ எளிமையாகத்தான் இருந்தது. இடப் பரப்பளவு சுமார் இரண்டரை ஏக்கர். நிறுவனர் வேலுச்சாமியின் பூர்வீக நிலம். முழுமையாக இதற்கென ஒதுக்கிவிட்டார். அதனுடைய இன்றைய மதிப்பு சுமாராக 2 கோடி இருக்கலாம்.

உள்ளூர் பஞ்சாயத்து முக்கிய பொறுப்பில் உள்ள நபரின் உடமையாக்கப்பட்ட நிலம், இந்த காப்பகத்திற்கு எதிரே உள்ளது. அதை வாங்க வருபவர்கள், எதிரே காப்பகத்தை பார்த்தவுடன் வாங்க மறுத்து சென்றுவிடுகிறார்களாம். இது ஒரு காரணம்.

நிறுவனருக்கு வாரிசு இல்லாததால் பிற்காலத்தில் இந்த நிலத்தையும் அபகரிக்க எண்ணி தன்னை அந்த காப்பகத்திற்கு தலைவராக நியமிக்க அதிகாரத்தை பயன்படுத்தி வற்புறுத்துகிறாராம். இது மற்றொரு காரணம்.

ஒரேகல்லில் இரண்டு மாங்காய் அடிக்க திட்டம் போட்டிருக்கிறார்.

இந்த விசயம் CM தாத்தா வரை விசயம் போயும்(!?!!) இன்னும் காப்பகத்திற்கு விடிவு பிறக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக குடிதண்ணீர் சப்ளை தரப்படவில்லை. விளைவு தினமும் (ரூபாய் 200 க்கு) விலைக்கு குடிதண்ணீர் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

ஒரு வார கால தண்ணீர் செலவைக் கொடுத்துவிட்டு, வாழ்க்கைத்துணைவி வாங்கிவந்த அரிசி மூட்டையையும் கொடுத்துவிட்டு, அவரோடு பேசிக் கொண்டு இருக்கும்போது

”தண்ணீருக்கு இந்த கஷ்டப்படவேண்டியுள்ளதே என்ன செய்யலாம். மீடியா-வின் கவனத்திற்கு கொண்டு போய்விடலாமா?” என்றேன்.

அதற்கு அவர் ”வேண்டாம். இப்பொழுதே மிகுந்த எதிர்ப்பை
சமாளித்து கொண்டு இருக்கிறேன். அது இன்னும் அதிகமாகிவிடும்.
காப்பக பராமரிப்புக்கு பொருளோ, பணமோ நண்பர்களிடம் சொல்லி
உதவுங்கள். அதுவே போதுமானது”.என்றார்.

பாருங்களேன்.. நம் அரசியல்வாதிகளின் லட்சணத்தை

உதவ மனமில்லாவிட்டாலும், உபத்திரவம் பண்ணாமல் இருக்கலாம் அல்லவா!!

சரி இந்த விஷயத்தில் நாம் முடிந்தால் உதவி செய்யலாமே..பொதுவாக காப்பகங்களுக்கு உதவுவது சிறப்பு என்றாலும், அதோடு சேவை மனப்பான்மையோடு சொத்து முழுவதையும் அர்ப்பணித்து, அதிலேயே சேவையும் ஆற்றுகிற ஒரு அன்புள்ளம் கொண்ட நபருக்கு அரசியல் எதிர்ப்பையும் சந்திக்கவேண்டிய அவலம்,கொடுமை நேர்ந்திருக்கிறது.

அவர் தேவையான மனவலிமை பெற பிரார்த்திப்பதோடு பொருளோ, பணமோ முடிந்தவரை உதவி செய்வோமே...பதிவர்களால் ஒரு நன்மை நடக்கட்டுமே...

தொடர்புக்கு..

கருணை இல்லம்
பதிவு எண் 18..2003
Dr.K.வேலுச்சாமி M.com.,M.A.,M.Lit.,
S.பெரியபாளையம்,
ஊத்துக்குளி ரோடு
திருப்பூர்-641607

தொலைபேசி:0421-291887. 0421-6541998

நன்றி