"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, June 26, 2017

கேள்வியும் பதில்களும் - ஓஷோ

முந்தய பதிவில், கேள்வி எப்போதுமே சரிதான்.. பதில்கள்தாம் தவறுக்கு உட்பட்டவை என்று பார்த்தோம். வாழ்க்கை அனுபவத்தில் பல வருடங்களுக்கு முன் சரியாக இருந்தது. தற்போது, எனக்குள் எழுகின்ற கேள்விகள் அனைத்தும் தேவையில்லாதவை என உணர்கிறேன்.

பிறரது கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் நேருகின்றபோது எந்தப் பிரச்சினையும் இல்லை. மறைமுகமாக ஒரு பிரச்சினை உண்டு.. பலவிதமான பதில்கள் முந்திக்கொண்டு நிற்கும். மனம் சார்ந்த கேள்விகள் என இங்கே குறிப்பிடுவது அவசியம்.

எனக்குள் எழும் கேள்விகளே தேவையில்லை என்றபொழுது ஏற்கனவே எனக்குள்  இருக்கின்ற பதில்கள் பலவும் இல்லாது போக வேண்டியவையே..

ஆம். கற்றவை அனைத்தும் பயன்பட்ட காலம் போய், கழித்துவிடவேண்டிய தருணம் வந்துவிட்டது.

இனி ஓஷோவின் வார்த்தைகளைப் பார்ப்போம்.
                                                                           ----


மனதில் பதில்கள், பதில்கள் என்று பலவும் இருக்கின்றன.  இது முடிவில்லாது தொடரும். ஆனால் உண்மையில் பதில் என்பது ஒன்றே ஒன்றுதான்.
அந்த பதில் எல்லா கேள்விகளையும் கரைத்துவிடும்.

 கேள்விகளின் சித்திரவதை இருந்து கொண்டேதான் இருக்கும். மனதில் பதில்கள் இருக்கும்வரை புதிய கேள்விகள் வந்து கொண்டுதான் இருக்கும். மன வேர் இருக்கும்வரை கேள்விகள் கிளைத்து, புதிய தளிர்கள் அரும்பிக் கொண்டேதான் இருக்கும்.

மனதின் பிணைப்பை அறுக்கும்போது, அதன் வேர்களை வெட்டுகிறாய்.
மனதோடு ஆன அடையாளங்களை விட்டு ஒதுக்கும்போது, எதனோடும் அடையாளப்படுத்திக் கொள்ளாமல் பரிசுத்தமாக, ஒரு சாட்சியாகப் பார்த்துக் கொண்டு, கவனித்துக்கொண்டு இருக்கும்போது எல்லோரிடத்திலும் கேள்விகள் கரைந்து போகின்றன.

இப்போது மிஞ்சி இருப்பது ஒரே ஒரு பதில்தான். அதுவே ஆழ்ந்த நிர்ச்சலனம்.

ஒருவேளை  கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் தெரிவது போல் நினைக்கிறாயா ? அது ஒரு பிரமை. இந்த மனம் பிரமைகளைத் தோற்றுவிப்பதில் வெகு சமர்த்து. இந்த மனம் பசப்பக் கூடியது. அறிவு என்ற பெயரில் உன்னை ஏமாற்றிவிடும். எல்லாவற்றிலும் உன்னை ஏமாற்றக் கூடியது.  ஏற்கனவே ஞானியாகி விட்டாய். புத்தனாகிவிட்டாய் என்று கூட உன்னை நம்ப வைத்து ஏமாற்றி விடும். எச்சரிக்கையாக இரு.

மனதைக் கூர்ந்து கவனி. அப்படி கவனிப்பதில் கேள்விகள் மறைந்து போகின்றன. அவ்வளவே. பதில்கள் கிடைத்துவிடுகின்றன என்று நான் சொல்லவில்லை.

பதில்கள் என்ற தகவல்களை நூல்கள், பல்கலைக்கழகம், ( இணையம் ) என எங்கிருந்து வேண்டுமானாலும் பெறலாம். விபரம் தெரிந்தவராக ஆகிவிடலாம். ஆனால் என் பணியோ '' நீ கற்றுக்கொண்டதை விட்டுவிட வைப்பதுதான்” இப்போது உன்னிடம் பதில்கள் இருப்பது இல்லை. இயல்பாகச் செயல்படுகிறாய். ஏற்கனவே இருக்கின்ற முடிவுகளைச் சார்ந்தோ, கடந்த காலம் சார்ந்தோ இல்லாமல் இயல்பாய் நீரூற்று கிளம்புவது போல் உன் செயல்கள் அமைகின்றன.



ஓஷோ
தம்மபதம் I
நிகழ்காலத்தில் சிவா


Sunday, June 25, 2017

கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும்..

சுமார் 20 வருடங்களுக்கு முந்தய மனநிலையை நினைவுக்கு கொண்டு வந்து பார்க்கிறேன். பள்ளிப்பருவம் முடிந்து  பணிக்குச் சென்று கொண்டிருந்த காலகட்டம்.  கல்வி கற்ற அந்த நாட்களில் நான் அனுபவித்த உலகம் வேறு.. வேலைக்குச் சென்ற போது கண்ட உலகம் வேறு.. விதமான விதமான மனிதர்கள்., உணர்வுகள்.

அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வருமானம் இருந்தாலும், மனதில் உலகம் பற்றிய புரிதல் தேவையும், நான் எப்படி இயங்க வேண்டும் என்ற அறியும் வேட்கையும் மனதிற்கு ஒரு நிறைவின்மையைக்  கொடுத்துக்கொண்டே இருந்தது. கேள்விகள் நிறைய மனதில் எழுந்து கொண்டே இருக்கும்..

இந்த சூழலில் வேதாத்திரி மகானின் பாதை கிட்டியது. அப்போதய மனநிலையில் வேதாத்திரி அவர்களின் உரைத் தொகுப்புகளை நேரில் கேட்டபோது பல்வேறு தெளிவுகள் கிடைத்தன. அவரது சிறப்பே கேள்வி ஏதும் எழாதவாறு மிகத் தெளிவாக,தொடர்பு அறுந்து போகாமல் உரையாற்றுவதுதான்..

ஆழியாரில் ஒரு சிறப்புப் பயிற்சியில் அன்பர் ஒருவர் எழுந்து,  கேள்வி கேட்கிறார்.. அந்தக் கேள்வி, பிறரது பார்வையில்  ‘மகானிடம் இதையெல்லாமா கேட்பார்கள் ?  இது கூடத் தெரியலையா ‘ என்கிற பாணியில் அமைந்திருந்தது.. கூடியிருந்த கூட்டத்தில் மெல்லிய சிரிப்பொலி எழுந்தது. கேள்வி கேட்டவருக்கோ கொஞ்சம் சங்கடம் ஆகிவிட்டது போலும். முக வாட்டம் தெரிந்தது.

ஒரு நிமிடம் அமைதி.. வேதாத்திரி மெளனம் கலைத்தார்..

எந்தக் கேள்வியிலும் தவறு என்பதே இருக்கவே முடியாது. ..
பதிலில் வேண்டுமானால் தவறு இருக்கலாம்..

கேள்வி கேட்டவரின் அறிவு நிலைக்கு ஏற்ப, வாழ்க்கைச்  சூழலுக்கு ஏற்ப  பதில் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வத்துடன் கேள்வி கேட்கின்றார். அதை ஏற்று அவருக்குப் பொருத்தமான பதிலைக் கூற வேண்டும்.பதில் சொல்பவருக்கே பொறுப்பு அதிகம். பதில் சொல்வதில், சொல்பவரின் அறிவாற்றல் திறம், பண்பு வெளிப்பட்டுவிடும். அதனால் அக்கறையுடன், கவனத்துடன் பதில் சொல்ல வேண்டும்’ என்று பதில் சொன்னார்.

கேள்வியினை எப்படி எதிர்கொள்வது ? கேட்டவரின் மீது கிண்டலை, ஆணவத்தை  வீசாது கருணையோடு எந்தவிதமாக பதில் சொல்ல வேண்டும்?. இருவருக்கு இடையே ஆன உரையாடலில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற உணர்த்தல் அனைவருக்கும் அங்கே தரப்பட்டது.

சரி இதை நான் இங்கே ஏன் குறிப்பிட வேண்டும். ?

உறவுகள், நட்புகள், தொழில்ரீதியாக தொடர்புடையோர் என சமூகத்தில் புழங்கும்போது மனதில்  எழும் பல கேள்விகளுக்கு பதில் நிச்சயம் தேவை. கூடவே நாம் எப்படிப் பதில் சொல்ல வேண்டும் ? இந்த பதில்கள் நமக்கு எப்படிச் சொல்லப் பட்டிருக்கவேண்டும் ?  என்ற சூழலுக்குச் சாட்சியாக ..
இருதரப்புக்கு இடையே உரையாடல் கலை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சாட்சியாக இந்தச் சம்பவம் இருந்தது.

அப்போதய மனநிலைக்கு இந்த பதில்களே நிறைவானதாக இருந்தது. மன அமைதியும் , செயல்களில் கிடைத்த விளைவுகளும் நிறைவாகவே இருந்தது. 100 சதவீதம் சரியாகவே இருந்தது..மற்றொருவரிடம் உரையாட மகானின் இந்த வார்த்தைகளே போதுமானதாக இருந்தது..

காலச் சக்கரம் சுழன்றது..  எது பொருத்தமாகவும், தெளிவைத் தருவதாகவும் இருந்ததோ அது எனக்குத் தேவையில்லாத ஒன்றாக மாறிவிட்டது. மாற்றம் என்னிடத்தில்...

முரண்பாடாகத் தெரிகின்றதா ? ஏன் என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.



Thursday, June 15, 2017

கவனி.. கவனி.. கவனி - ஓஷோ

கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான்

கவனித்திருப்பது.

கவனி.   உன் மனதில் ஓடும் ஒவ்வொரு எண்ணத்தையும் கூர்ந்து கவனி.  உன்
ஒவ்வொரு  செயலையும், ஒவ்வொரு அசைவையும்  தொடர்ந்து கவனித்துப் பார்.

நடக்கும்போதும், பேசும் போதும், உணவு உண்ணும் போதும், குளிக்கும் போதும், உன் ஒவ்வொரு அசைவையும் கவனி. அனைத்தையும் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இரு.

Wednesday, June 14, 2017

குருவை உணரும் வழி - ஓஷோ

அன்புக்குரிய போதிச் சத்துவர்களே.. என்று உங்களை நான் அழைக்கும்போது, என்னுடைய அறிவு நிலையில் நின்று பேசவில்லை. 

என் உயிரினை உங்களின் உயிருக்குள் கொட்டுகின்றேன்.

இது சக்திகளின் சங்கமம். ஆன்மாக்களின் சந்திப்பு. அதனால்தான் என்னோடு நீங்கள் இருக்கும்போது நான் பேசுவது சத்தியம் ஆகத் தெரிகின்றது. உங்களால் முழுமையாக நம்ப முடிகின்றது.

Tuesday, June 13, 2017

தூசு படியாத கண்ணாடி - ஓஷோ

மனம் என்பது ஆசைகளின் தொகுப்பு. இந்த ஆசைகள் எல்லாம் நினைவகத்தைச் சார்ந்தவை. நினைவகம் என்றபோதே கடந்தகாலம்தான்.

ஆனால் நெஞ்சம் இந்தக் கணத்தில் வாழ்கிறது.அதன் துடிப்பு இந்தக் கணத்துக்கானது. இதனாலேயே பரிசுத்தமானதாகிறது.

மனமோ நெஞ்சுக்கு நேர் எதிர்., மனம் எப்போதுமே இங்கே இப்போதயதில் இருப்பதில்லை. கடந்த காலத்தில் பெற்ற அனுபவங்களை அசைப் போட்டுக் கொண்டிருக்கின்றது.  அல்லது அத்தகைய அனுபவங்களை எதிர்காலத்தில், எதிர்நோக்கிக் கற்பனையில் திளைக்கின்றது.
கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்குமாக ஊசலாடிக் கொண்டு நிகழ்காலத்தில் கால் ஊன்றுவதில்லை. நிகழ்காலத்தில் இருப்பதில்லை.
இப்போது பிரச்சினையாக இருப்பதே அறிவார்ந்த மனம்தான்..

நீ உன் இதயத்திலிருந்து, மூளைக்குள் குடி புகுந்து விட்டாய். பகலில் எண்ணங்கள், இரவில் கனவுகள் என வாழ்க்கை கழிந்து கொண்டே இருக்கின்றது. இப்போது என்ன செய்ய வேண்டும் ?

வேதங்கள், உபநிடதங்களில் அழகிய வார்த்தை அலங்காரங்களைக் காணும்போது கவனமாக இரு. தத்துவார்த்தமான வாதங்களை கவனமாக கவனி. வார்த்தைகளில் தொக்கி நிற்கும் செய்தியை மட்டும் பார். ஆனால் நுண்மையான தர்க்கத்தில் உன் நேரத்தை வீணடிக்காதே. வார்த்தைகளில் அதீத கவனத்தை செலுத்தி அர்த்தம் தேடிக்கொண்டு இருக்காதே.

மெளனம் கைக்கொள். நெஞ்சகத்தை நோக்கு., இயல்பைக் கைக்கொள், உன்னோடயே இயைந்து பிரவாகி. இதுவே நீ சுதந்திரம் அடைய வழி 

இயல்பு என்பது என்ன ? பிரக்ஞையே உன் இயல்பு.

மனதின் சலனநிலையை, எண்ணங்களின் வயப்பட்டு பின் செல்லுதலை, வெளியே போவது என்று குறிக்கின்றோம். எண்ணங்களுக்கு அகப்படாமல் இருப்பது என்பதே உள்ளே போவது.. எண்ணமும் ஆசையுமே சேர்ந்ததே மனம்., இதுவே வெளியே போகும் யாத்திரைக்கு எரிபொருள். இங்கே ஆசை என்பது மனம் எதிர்காலத்தில் சிக்கிக் கொண்டு இருப்பதையே குறிக்கும் என்பதையும் அறிக.

மனம் வெளியே போகமல் இருந்துவிடுவதே.....   உள்ளே இருப்பது

மனம் வெளியே போகாமல் எப்படி நிறுத்தி வைப்பது ? எண்ணங்களை அலட்சியப்படுத்திவிடு. அவைகள் பற்றி கவலைப் படவேண்டாம்
அவை இருந்தாலும் அவற்றைக் கண்டுகொள்ளாதே. அவற்றிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காதே. இருக்கட்டும் விடு. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு மெளனமாக இருந்துவிடு. கவனிப்பது என்பது கண்காணிப்பதல்ல.. விழிப்போடு இருத்தல், சாட்சியாக இருத்தல்.

மனம் உள்ளே போக என்ன வழி ? உன்னுடைய எண்ணங்களை  உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இரு.  உன் எண்ணங்களும் நீயும் வேறு வேறு என்பதை எப்போதும் நினைவில் வைத்திரு. எந்த விருப்பு வெறுப்பும் இன்றி விட்டேற்றியாக உன் எண்ணங்களை கவனித்துப்பார். இவை தவறு, இவை சரி என்றும் தீர்மானங்களின் பாற்பட்டு எண்ணங்களைப் பார்க்காதே..  அவை பற்றி எந்தக் கருத்தும் எழுப்பாதே.

எண்ணங்களின் ஊர்வலத்தை பார்த்துக் கொண்டிரு.

எண்ணங்களின் போக்குவரத்து நகர்வதற்கு நீ சக்தியைக் கொடுக்கும் வரைக்கும் அது நகர்ந்து கொண்டுதான் இருக்கும். உன்னுடைய சக்திதான் அதற்கு ஆதாரம்.. அந்த சக்தியை நிறுத்தினால் எண்ணப் போக்குவரத்து நின்றுவிடும்.. அப்படி உன்னை அறியாமல் வழங்கும் சக்தியை தடுப்பதுதான் கவனித்தல் என்ற செயல். கண்ணாடியைப் போல் மனம் எதையும் வெறுமனே பிரதிபலிக்க வேண்டும்.  மாறாக உருமாற்றம் செய்யக்கூடாது.

வெளிச்சத்தை பார்க்கும் குழந்தை இது சூரியன், இல்லை மின்சார விளக்கு, இல்லை வாகன விளக்கு, என்று சொல்லிக்கொள்ளுமா ? எல்லாவற்றையும் பார்த்தாலும் எதைப் பற்றியும் ஒன்றும் சொல்லிக் கொள்ளாது.  இதுதான் பிரதிபலிப்பது என்பது ஆகும்.

எண்ணங்கள் என்பவை தூசுத் துகள்கள்..
தூசு படியாத கண்ணாடியாக இருங்கள்.

ஓஷோ
தம்மபதம் I






Saturday, June 10, 2017

அந்த உணர்வு உங்களைப் பற்றிக்கொள்ள.. ஓஷோ

அந்த உணர்வு உங்களைப் பற்றிக் கொள்ள அனுமதியுங்கள். அப்போது அது என்னவென்று புரிந்துவிடும். ஆனால் அதற்கு மாறாகவே நீங்கள் செயல்படுகிறீர்கள். அதை நீங்கள் ‘பற்றிக்’ கொள்ளவே முயல்கிறீர்கள். மனம் அப்படித்தான் விரும்புகிறது. இதைத்தான் மனம் ‘புரிந்து கொள்ளுதல்’ என்று உங்களுக்குச் சொல்கிறது. எதையாவது ஒன்றைப் பற்றாத வரை மனம் நிறைவடைவதே இல்லை.

எதுவும் செய்யாமல் , சாதரண மெளனத்துடன் உடலளவிலோ, உணர்வுபூர்வமாகவோ, அறிவுபூர்வமாகவோ எதுவும் செய்யாமல் , சும்மா அப்படியே முழு அமைதியுடன் இருக்க முடிகிறதா ? முடிந்தால் அது உங்களைப் பிடித்துக் கொள்ளும்.  அதை அறிவதற்கான ஒரே வழி, அது உங்களைப் பிடித்துக் கொள்ள அனுமதிப்பது மட்டுமே.

பறவைகளின் பாடல் கேட்கும்போது, காற்று மரங்களிடையே வீசும்போது, நீரோடையில் தண்ணீர் சலசலத்து ஓடும்போது உங்களை அந்த உணர்வு பற்றிக் கொள்ள அனுமதித்தால் போதும், சட்டென எங்கிருந்தோ உண்மை வெளியாகிவிடும். உங்களுக்குள் தம்மம் தோன்றிவிடும்.

வைகறை விண்மீன் மறைவதைப் பார்த்தபடி மரத்தடியில் அமர்ந்திருக்கும் போதுதான் புத்தர் ஞானம் பெற்றார்.
புத்தருக்கு ஞானம் கிட்டியது மரத்தடியில்...
மகாவீரருக்கு ஞானம் கிட்டியது வனத்தில் சும்மா உட்கார்ந்திருந்த போது...
முகம்மதுவிற்கு ஞானம் பிறந்தது மலையொன்றின் உச்சியில்...

அதிகாலையில் எழுந்துபோய் உதிக்கும் சூரியனைப் பார். நடு இரவில் உட்கார்ந்து வானத்து நட்சத்திரங்களைப் பார்.. நிலவினைப் பார். மரங்களையும் பாறைகளையும்  நண்பனாக்கிக் கொள். ஆற்றருகே அமர்ந்து அதன் கலகலப்பைக் கேள்.  அப்படிச் செய்யும்போது இயற்கை உன்னைத் தன் வசப்படுத்த விடு. இயற்கையை மனதால் உன் உரிமையாக்க நினைக்காதே.  உன்னை அதன் வசப்பட அனுமதித்துவிடு.

அது உன்னை வசப்படுத்தட்டும்.  விடு... அதை ஆடி அனுபவி..  பாடி அனுபவி. அதனோடு இரண்டாகக் கலந்துவிடு.அதுதான் அதை அறிந்துகொள்ளும் ஒரே வழி.

ஓஷோ
தம்மபதம் I