"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, January 25, 2010

திருப்பூரில் புத்தகத் திருவிழா - 2010

அன்பு நண்பர்களே,

திருப்பூரில் கடந்த ஆறுவருடங்களாக நடந்து வந்த புத்தக கண்காட்சி இந்த வருடமும் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 7 வரை நடைபெறப் போகிறது. இந்த செய்தியை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்.

(படத்தின் மீது ’க்ளிக்’ செய்து பெரிதாக்கி பார்க்கலாம்)
















வாய்ப்பும் வசதியும் இருக்கிற அன்பர்கள் அனைவரும் கலந்து பயன்பெறுக..:))

திருப்பூர் : பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் சார்பில், ஏழாம் ஆண்டு புத்தக கண்காட்சி, திருப்பூர் கே.ஆர்.சி., சென்டரில் நாளை துவங்கி 10 நாட்கள் நடக்கிறது; தினமும் காலை 11.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடக்கிறது. தமிழகத்தின் முன் னணி புத்தக வெளியீட்டாளர்கள், விற்பனையாளர் கள் என, 72 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.இந்நிறுவனங்கள் அமைக்கும் 94 ஸ்டால்களில், குழந்தை இலக்கியம், அறிவியல், கலை, இலக் கியம், மொழி, வரலாறு, அரசியல், தொழில்நுட்பம், தத்துவம், மதம், ஆளுமை, கதை, நாவல்கள் என, அனைத்து பிரிவுகளிலும் புத்தகங்கள் இடம் பெறுகின்றன.கண்காட்சி வரவேற்புக்குழு தலைவர் துரைசாமி, செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் நிசார் அகமது ஆகியோர் கூறுகையில், "ஜெய்வாபாய் பள்ளியில் நடத்தப்பட்ட இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும். பேச்சு போட்டியில் வென்ற மாணவ, மாணவியர் கண் காட்சி விழா மேடையில் பேச உள்ளனர். தினமும் குறும்படங்கள் ஒளிபரப்பப்படும்,' என்றனர்.
வாழ்த்துகள்

Sunday, January 24, 2010

படித்ததில் பிடித்தது 24/01/2010

கூடுசாலை நண்பரின் இடுகை நாம் பரிசோதனை எலிகள் இல்லை

//இந்த மலட்டு விதைகளை கொண்டு நம் விவசாயிகள் மீண்டும் விதைக்கமுடியாது. விளைவு விவசாயிகள் விதைகளுக்கு மீண்டும் அந்த நிறுவனத்தையே அண்டியிருக்க வேண்டும். நம் முன்னோர்கள் “விதைகள்” என கொஞ்சம் தானியங்களை தலைமுறை தலை முறையாய் காப்பாற்றி நம் கைகளில் கொண்டுவந்து சேர்த்திருக்கும் தானிய ங்களை இழந்துவிட்டு விதைக்காக வியாபாரத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட நிறுவனங்களிடம் நிற்கவேண்டும்.//

பெரிய அளவில் பணம் பண்ணுவது என்பது மனிதகுலத்தின் வாழ்வாதாரத்தோடு, ஒரு நாட்டின் விவசாயத்துறையையே மலடாக்கத்துடிக்கும் இயல்பு கண்டு மனம் கொதிக்கிறது.. நீங்களும் படித்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

***********************************************
அடுத்தது ஒரு தொழில்நுட்பம்....


இன்டர்நெட் விரும்பியா? உஷார் ஜெர்மன் அரசு எச்சரிக்கை

பெர்லின் : இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பலவீனமாக உள்ளதை, மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒத்துக் கொண்டதை தொடர்ந்து, அதற்கு மாற்றாக வேறு இணைப்பை பயன்படுத்துமாறு, ஜெர்மன் அரசு, அந்நாட்டு இணையதள பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கூகுள் இணையதளங்களில் சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகும் இணையதளங்களை, சீனா திருடி வருவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது. இதை தொடர்ந்து, கூகுள் போன்ற இணையதள இணைப்பிற்கு செல்ல பயன்படுத்தும், இன்டர் நெட் எக்ஸ்புளோரர் பலவீனமாக இருப்பதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒத்துக் கொண்டது.எனினும், இணையதள பயன்பாட்டாளர்களுக்கு, இதனால் ஏற்படும் அபாயம் மிகவும் குறைவு, இணையதள பயன்பாட்டாளர்களுக்கு தீவிர அபாயம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், பாதுகாப்பு அமைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்தது.

இதுகுறித்து, ஜெர்மன் நாட்டின் தகவல் பாதுகாப்பிற்கான பெடரல் அலுவலகம் அல்லது பி.எஸ்.ஐ., கூறியதாவது:ஜெர்மனியர்கள், எக்ஸ்புளோரரின் அனைத்து வெர்ஷன்களையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் அதிகரித்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், தாக்குதல்கள் நடத்துவது என்பது சிறிது கடினமானது; ஆனால், முழுவதுமாக பாதுகாப்பு அளிக்காது. எனவே, இணையதளத்தை பயன்படுத்தும், ஜெர்மனியர்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு மாற்றாக வேறு பிரவுசரை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவன செய்தி தொடர்பாளர் தாமஸ் பாம்கார்ட்னர் கூறுகையில்,"ஜெர்மன் அரசின் எச்சரிக்கை குறித்து, மைக் ரோசாப்ட் நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது. ஆனால், இதை ஏற்றுக் கொள்ள முடியாது. கூகுள் இணையதளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், குறிப்பிட்ட நோக்குடன், பெரியளவில் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இவ்வாறான தாக்குதல்கள், சாதாரண மக்கள் அல்லது நுகர்வோர்களுக்கு எதிராக நடைபெறாது'

நன்றி: தினமலர்

Wednesday, January 20, 2010

காயில் மாற்றிய கதை....

தொழிற்சாலையில் ஆர்டருக்கான ஆயத்த ஆடைகள் உற்பத்தி நடைபெற்றுக்கொண்டு இருந்தது. மணி முற்பகல் 11.30. சட்டென ஒரு புறத்தில் அமைந்த தையல் இயந்திரங்களுக்கான 'ஸ்டார்ட்டர்' மின் கட்டுப்பாட்டுக் கருவி 'டப்' என சத்தத்துடன் பழுதானது.

அருகில் இருந்த பொன்னுச்சாமி சட்டென அங்கே சென்று தனக்கு தெரிந்த அனுபவ அறிவைக் கொண்டு மின்சாதனத்தை சோதிக்க அதில் உள்ள ’காயில்’ புகைந்துவிட்டது. அதை மாற்றினால்தான் மீண்டும் இயந்திரங்கள் இயங்கும். என தெரிந்தது.

உற்பத்தி தடைபட்டதோடு அடுத்து எவ்வளவு நேரத்தில் ரெடியாகும் என்று தெரியாத நிலை. ஆஸ்தான மின் பழுது நீக்குபவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச அவர்கள் அடுத்த பத்து நிமிடத்தில் வந்து விட்டனர்.

’காயிலை’ கழட்டி கையில் கொடுத்து புதியதாக வாங்கி வரச் சொல்ல இன்னொரு பணியாளரை அழைத்து அருகில் அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மின்சாதன பொருள்கள் விற்கும் கடையில் அதை புதிதாக வாங்கி வரப் பணித்தார் பொன்னுச்சாமி

அங்கே அந்த கடையில் ’காயில்’இல்லை, தொழிற்சாலை அமைந்த இடம் சற்று நகரத்தை விட்டு தள்ளி இருக்கிறது. இப்போது வேறு எங்கு கிடைக்கும் என விசாரித்தில் வடக்குபுறமாக மூன்று கிலோமீட்டர் சென்றால் அங்கு உள்ள சிற்றூரில் கிடைக்கும் அல்லது தெற்குபுறமாக சென்றால் ஐந்து கிலோமீட்டர் சென்று நகரை அடைந்தால் நிச்சயம் கிடைக்கும் என்று தகவல் சொன்னார்கள்.

நேரமாக, நேரமாக பொன்னுச்சாமிக்கு வேகமாக செயல்படவேண்டும் என உணர்ந்தார். இல்லையெனில் உற்பத்தி தடைபடும். மேலும் சம்பள இழப்பும் நேரும். அந்த பணியாளரை வடக்கு நோக்கி சென்று வாங்கிவ்ரப் பணித்தார். அங்கு இல்லையென்றால் திரும்ப வந்த வழியே அங்கிருந்து எட்டு கி.மீ வந்து டவுனை அடைய வேண்டும். இன்னும் நேரமாக வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை இருந்தால் நேரம் மிச்சம். உற்பத்தி பாதிக்காது. ரிஸ்க் எடுத்தார்.

பணியாளர் வடக்கே சென்று அங்கு கடைகளில் விசாரிக்கத் துவங்க ’அங்கு இல்லை’ என்ற பதிலே கிடைத்தது. பொன்னுச்சாமிக்கு இயல்பாகவே காலதாமதம் என்றால் பிடிக்காது. ஏற்கனவே முக்கால் மணி நேரம் வீணாகி விட்டிருந்தது. இனி அந்த பணியாளர் திரும்பவந்து டவுன் சென்றால் கூடுதலாக இன்னும் அரைமணியிலிருந்து ஒருமணிநேரம் வீணாகும்.

பொன்னுச்சாமிக்கு இருப்புக்கொள்ளவில்லை. சட்டென ஒரு யோசனை. பணியாளர் அங்கே முயற்சித்து கிடைக்க வில்லை எனில் உடனடியாக டவுனில் வேறுநபரை நியமித்து வாங்கிவிட்டால் பயணநேரம் அரைமணி மிச்சமாகும்.

பொன்னுச்சாமியின் வீடு டவுனில் இருந்தது. அருகிலேயே பெரிய மின்சாதன பொருள்கள் விற்கும் கடையும் இருந்தது. இந்த மதிய நேரத்தில் மனைவி வீட்டு வேலை முடித்துவிட்டு ஓய்வாக இருக்க வாய்ப்பு உண்டு. வீட்டு வேலை செய்ய வசதியான (நைட்டி) உடையில் இருந்தால் அப்படியே வீட்டைவிட்டு வெளியே வருவதை வெறுப்பவள்.


சரி ஆபத்திற்கு பாவமில்லை என மனைவியை உடைமாற்றி தயாராக இருக்கச் சொன்னால் ஒருவேளை அவசரமாக கடைக்குபோய் பொருளை வாங்கி வரச் செளகரியமாக இருக்கும் என முடிவு செய்தார்.

வீட்டிற்கு போன் செய்தார். போனை எடுத்த மனைவியிடம் ”ஆமா நீ நைட்டில இருக்கியா? இல்லை சேலைல இருக்கியா?”

”தேனுங்கோ என்ன விசயம்?”

இல்ல, அவசரமா எலக்ட்ரிகல் கடைக்கு போக வேண்டியதா இருக்கும். கொஞ்சம் சீக்கிரமா ரெடியாகு !”

”இதோ இரண்டு நிமிசத்துல ரெடியாகிடறோனுங்கோ” என்று போனை வைத்தார் அவரது மனைவி.

கிட்டத்தட்ட மொத்தமாக ஒருமணிநேரம் ஆயிற்று. பணியாளருக்கு போன் செய்ய, ஒருவழியாக கிடைத்து விட்டதாக அவர் கூறி விரைவாக தொழிற்சாலைக்கு வந்து கொண்டு இருப்பதாக தகவல் சொன்னார். வந்து அதைப் பொருத்த அரைமணிநேரம் ஆக ஒருவழியாய் இரண்டு மணிநேரத்திற்குள் இயல்புநிலை திரும்பியது.

பொன்னுச்சாமி சற்று நிம்மதியோடு மதிய உணவுக்காக வீடு திரும்பினார். வீடு வந்த போது மனைவி தேவையானால் வெளியே கிளம்பத் தயாராக இருக்க, பொறுமையாக உணவு எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார். அப்படியே தொழிற்சாலையில் உற்பத்தியில் ஏற்பட்ட பிரச்சினைகளை விவரித்தார்.

அக்கறையுடன் கேட்ட அவரது மனைவி புன்னகை செய்ய ”ஏன் சிரிக்கிற?” என்றார்

”அது வேறொண்ணுமில்லீங்க. திடீர்னு போனு பண்ணி நைட்டில இருக்கிறயா, இல்லை சேலையில இருக்கிரயான்னு கேட்டீங்களா எனக்கு ஒரு மாதிரியா ஆயிப்போச்சுங்கோ..” என்று நாணத்துடன் தலை கவிழ, பொன்னுச்சாமிக்கு சோறு உள்ளே இறங்கவில்லை.

Tuesday, January 19, 2010

விலகி ஒன்றிணைவோம்

அன்புடன் கதிருக்கு

இது ஒரு மாற்றுப்பார்வை :)))

வலைத்தளம் நம்மைக் கட்டிப்போட்டது உண்மைதான். அதை உணர்ந்து நாம் வெளியே வராமல் இருக்கும்போதுதான், இந்த போதையில் நாம் மயங்கி இருக்கிறோம் என உணராதபோதுதான் நம் எழுத்துகள் திசை மாறுகின்றன.  மனிதம், நட்பு  மறக்கப்பட்டு, நானே பெரியவன் என்கிற அகந்தை, ஆணவம் என்ற உணர்வு மேலோங்கி விடுகிறது. விளைவுதான் தரமில்லாத எழுத்துகள் ஒருசில பதிவர்களிடமிருந்தும், படைப்பாளிகளிடமிருந்தும் :))

எதன் பொருட்டு எழுதுகிறோம் என்பது அனைவருமே சுயபரிசீலனை செய்துதான் எழுதுகின்றனர். அவர்களுக்கு சரி எனப்பட்டதைதான் எழுதுகின்றனர். சிலசமயங்களில் எழுத்து ஒருவிதமாகவும், செயல் ஒரு விதமாகவும் இருக்கும். அது அவர்கள் வலைபோதையில் இருக்கின்றனர் என்பதை காட்டும். அல்லது அவர்கள் குணமே அதுவாக இருக்கும். அதை அடையாளம் காணுவது நம் பொறுப்பு.

குடிபோதையில் இருப்பதுபோல் தான் இதுவும்,:)) 

சமுதாயத்தில் பார்க்கும் மக்கள்தானே வலைத்தளத்திலும், வேறு கிரகத்தில் இருந்து வந்துவிட்டார்களா என்ன!!  வலையுலகில் நட்பு ஒன்றே பிரதானமாக இருப்போம். அதில் ஒருவேளை கர்வம் கொண்ட படைப்பாளிகளிடமிருந்து அவசியமானால் விலகிக்கூட இருக்கலாம். இன்னும் சரியாகச் சொன்னால் நம்மைவிட சகல விதத்திலும் அவர்களை சாமர்த்தியசாலிகளாகவே பார்க்கிறேன்.

உங்களாலும் என்னாலும் நீதி, நேர்மை, உண்மை, அன்பு என்ற விசயங்களை தாண்ட முடியாது. ஆனால் அவர்களுக்கு இந்த துணிவு இருக்கிறது.
அவர்களை திருத்துவது நிச்சயம் வாசகர்களால் முடியாது. அவர்களாகவே உணர்ந்து திருந்தினால்தான் உண்டு. அதற்கு நமது எதிர்வினையாக, மாற்றுக்கருத்துகளைச் நேரடியாக இடுகையின்மூலம் சொல்லாம். ஒருவேளை அவர்களை இக்கருத்து சென்றடைந்து திருந்த வாய்ப்பு உண்டு.

ஒருவரது நோக்கத்தை ஒட்டியே செயல்பாடு உண்டு. எனவே செயலைத் திருத்தமுடியாது. எனக்கு இரண்டுகண்ணும் போனாலும் பரவாயில்லை, அவனுக்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் என நினைப்பவரும் உண்டு, மண்ணுக்கு போகிற ஒருவரது கண்களை இருவருக்கு வாழ்வில் ஒளிகூட்ட பாடுபடுவோரும் உண்டு. இதுதான் உலகம். இது பதிவுலகிலும் உண்டு.

இந்த குறுகிய நோக்கம் கொண்ட படைப்பாளிகளை விட்டு விலகுவதும், அவர்களை பொருட்படுத்தாமல் இருப்பதுமே நாம் அமைதியாக இருக்க வழி.
அவர்கள் செயலுக்கு அவர்கள் தகுந்த விளைவினை நிச்சயம் அனுபவிப்பர். அதற்கு நாம் கருவியாக இருக்க வேண்டியதில்லை.

சுக்கு நூறாக உடைப்பது நம் வேலை அல்ல. மாறாக ஒதுங்கி ஒத்த எண்ண்ம் கொண்டவர்களோடு ஒன்று சேர்ந்து வலையுலகம் என்பது என்ன, வலையுலகம் என்பது ஒரு ஆக்கபூர்வமான அமைப்பு என்று மாற்ற என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யலாம். சண்டை சச்சரவு என்ற கதைக்கு உதவாத பொழுதுபோக்க மட்டும் வலைப்பதிவு என்ற நிலையை மாற்ற முயற்சிப்போம்.

//* சக படைப்பாளிகளை தெருவில் சண்டையிடும் விலங்குகளெனவும், அவர்களின் படைப்புகளைக் குப்பைகளெனவும் சொல்ல வைக்கிறது.

* சக படைப்பாளியின் படைப்பினை கிழித்தெறியச் செய்கிறது, சாலையில் செல்லும் ஒரு பெண்ணைக் குறித்தான மனவக்கிரத்தை அப்பட்டமாக எழுதத் தூண்டுகிறது.

* சக எழுத்தாளனின் உடல்கூறுகள், உடலில் இயற்கையில் அமைந்த குறைபாடுகளைக் குறித்து குரூரமாகப் பேசவைக்கிறது.//

இதெல்லாம் தன் இருப்பை பதிவு செய்யும் தந்திரம்.
எப்படியாவது அனைவரின் கவனத்தை ஈர்க்கும் மலிவான யுக்தி, இதை புரிந்து கொண்டால் போதும்
.

அவர்கள் நிம்மதியாக எதை வேண்டுமானாலும் கிழிக்கட்டும், பேசட்டும், நாம் கவனிக்கவில்லை என்பது உறுதியானால் தானாக அடங்கிவிடும்.அவர்கள் அகந்தை.

ஒன்றிணைவோம், சாதிப்போம்.

மாப்பு இது உங்கள் இடுகைக்கு மாற்றுக்கருத்துதான். எதிர்வினை அல்ல :)))))

Saturday, January 16, 2010

இப்ப என்ன ஆகிப் போச்சுங்கிறீங்க !!

"மத்திய தணிக்கைக் குழு அறிக்கையில், அரசு நிதியை, தவறான வழிகளில் செலவழித்து விட்டோம் எனக் குறிப்பிடப்படவில்லை' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:மத்திய தணிக்கைக் குழு அளித்த அறிக்கையில், தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட, 121 கோடி ரூபாய், தமிழக அரசின் இலவச திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.


தவறான வழிகளில் செலவழித்து விட்டோம் என்று கூறவில்லை. இந்த செலவழிப்பு முரண்பாடானதோ, தவறானதோ அல்ல.

அரசு நிதியை தவறான வழியில் செலவழிக்கவில்லை, தணிக்கை குழு அறிக்கை குறித்து முதல்வர் தகவல்

இனி வருங்காலத்தில் இதோ போல் எல்லா நிதிகளும் செலவழிக்கப்படும் என்பதற்கான திமிர்த்தனமான பதில், எதிர்பார்த்ததுதான்.

மக்களை பிச்சைக்காரனாகவே, இலவசங்களை கொடுத்து, பதவி, பணம், புகழ் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே பெற வேண்டும் என்கிற தெளிவான நோக்கத்துடன் இருக்கும் தானைத்தலைவர் கலைஞர் வாழ்க

தமிழன் என்ற பெருமையே நம்மை வாழ வைத்துவிடும் என வாய்சவாடல் இட்டுக்கொண்டு தமிழ்நாட்டிற்கு தொலைநோக்கோடு அடிப்படைவசதிகளான மின்சாரம், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக ஏதேனும் புதிய அணை கட்டுதல், போன்றவை பற்றி சிந்திப்பது கூட இல்லை,

அண்டை மாநிலங்கள் போட்டி போட்டுக்கொண்டு அணை கட்டுவதைப் பார்த்தால் சற்றே பொறாமையாக இருந்தாலும் நமது நிலையை எண்ணி உள்ளூர வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.

டிஸ்கி இது முந்தய பதிவின் தொடர்ச்சி

Wednesday, January 13, 2010

எனக்குத் தேவை பணம், பதவி, புகழ்

சென்னை : "தமிழக அரசின் முக்கிய திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர், "டிவி', காஸ் அடுப்பு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க பயன்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியை, முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டாமென அரசுக்கு சிபாரிசு செய்துள் ளோம்,'' என தமிழக, புதுச்சேரி இந்திய தணிக்கை முதன்மை அதிகாரி சங்கர் நாராயணன் தெரிவித்துள்ளார்.


அவர், மேலும் கூறியதாவது:தமிழகத்தில், கடந்தாண்டு மார்ச் வரை கிராமப்புறங்களில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட கோடிக் கணக்கான ரூபாய் பற்றி, தணிக்கை ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டது.கிராமப்புறங்களில் குளம் வெட்டுதல், வாய்க்கால் வெட்டுதல் போன்ற நீர் ஆதார வசதியை மேம்படுத்துதல் மற்றும் உள் கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு உறுதுணையாக, "அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி' திட்டம் உள்ளது.ஆறு மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டிய 120.98 கோடி ரூபாய், முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர் "டிவி', இலவச காஸ் அடுப்பு, முதியோருக்கான பென்சன், மகளிர் உதவிக் குழுவினருக்கு கடன் மற்றும் தள்ளுபடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.


ஒரு சில நகராட்சிகளில், வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி, பிற திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விவரங்கள் அடங்கிய பட்டியலை, கடந்த திங்கள் கிழமை, சட்டசபையில் தாக்கல் செய்துள்ளோம்.உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு பணியை எடுத்துக் கொள்வதற்கு முன், அப்பணியை எப்படி செய்ய வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை இல்லாமல், பல வேலைகளை திட்டமிடாமல் செய்து, மக்கள் பணத்தை வீணடித்துள்ளனர்.சென்னை மாநகராட்சி, நிர்வாகம், சுகாதாரம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டத்தில், மோசமான பணியை செய்துள்ளது.


முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, இலவசங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என, அரசுக்கு சிபாரிசு செய்துள்ளோம்.இவ்வாறு சங்கர் நாராயணன் கூறினார்.

நன்றி தினமலர் 13.01.2010