"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, May 11, 2009

தமிழ் இனத் தலைவர் கலைஞர் -- ஒரு குழந்தை

இன உணர்வு என்பது ஒருவகைத் தாய்மை உணர்வு. தான் பெற்ற பிள்ளை குடிகாரனாய், திருடனாய்,தறுதலையாய் எப்படி இருந்தாலும் எப்படி ஒரு தாய் தன் பிள்ளை மீது மாறாத பாசம் வைத்திருக்கிறாளோ அதைப் போன்ற உணர்வே ஓர் இனத்திற்குள் ஒருவருக்கொருவர் கொள்ளவேண்டியதே இன உணர்வு.

தன் இனத்தான் முட்டாளாய் இருந்தாலும், துரோகியாய் மாறினாலும், ஏழையாய் இருந்தாலும், எதிரியுடன் சேர்ந்து கொண்டாலும் அவன் மீது வெறுப்புக் கொள்ளாமல் அவன் உயர்வுக்காக எண்ணுவதும், எழுதுவதும், அதற்கேற்றபடி செயல்படுவதும் இன உணர்வு உள்ளவர்களுடைய கடமை. அப்படித்தான் நம் முன்னோர்கள் உழைத்திருக்கிறார்கள்.

தமிழர்கள் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பிரிந்து கிடப்பது உண்மைதான். அதை ஒரு பலவீனமாய்க் கருதவேண்டிய தேவை இல்லை.
ஏனெனில் ஆடு, மாடுகள்தான் மந்தை மந்தையாய்ச் சேர்ந்திருக்கும். சிங்கங்கள் தனித்தனியாய்ப் பிரிந்துதான் இருக்கும். அதில் தவறேதுமில்லை. ஆனால் தேவை ஏற்படும்போது எல்லா வேற்றுமைகளையும் தூக்கி எறிந்து விட்டு ஒன்று சேரும் ‘துப்பு’ வேண்டும். அதை மட்டும் பராமரித்தாலே போதும். நம்மை யாரும் வீழ்த்த முடியாது.

நன்றி: விநோதமான வினாக்கள்,கவனகரின் விடிவுதரும் விடைகள்

*************************************************************************************

இனி எமது பார்வையில் ...

மனிதனை மனிதன் துன்புறுத்தாமல், வாழும் உரிமையில் குறுக்கிடாமல் இருப்பது உண்மையான மனிதத்தன்மை. தெய்வத்தன்மை என்றே சொல்லலாம்.

அதிலிருந்து ஒருபடி ஆராய்ச்சிக்காக (வேறு வழி இல்லாமல்) கீழ்இறங்கி பார்த்தால் இராஜபட்சே சிங்கள இனம் அதனால் அவர் தன் இனத்தை காக்க தமிழனின் மீது தாக்குதல் நடத்துவதாக எடுத்துக்கொள்ளலாம்.

அன்னை சோனியா வேறு இனம், வேறு நாடு அதனால் அவரையும் கூட தமிழனுக்கு பதவியை அதிகாரத்தை வைத்துக்கொண்டு எந்த உதவியையும் செய்யாததையும் புரிந்துகொள்ளலாம்.

ஆனால் தமிழினத்தலைவர் என அழைக்கப்படும் கலைஞரோ தனது பதவியை வைத்து ஈழத்தமிழருக்கு எதுவுமே செய்யவில்லை. இலங்கைஅரசுக்கு உதவியாக செயல்படும் இந்திய அரசுக்கு துணை நிற்பதைத்தவிர.

குறைந்தபட்சம் எதுவுமே செய்யமுடியவில்லை என்றால் காங்கிரசுக்கு மத்தியில் அளித்துவந்த ஆதரவை விலக்கி இருக்கலாம்.

இங்கே ஆட்சி கவிழ்ந்தாலும், அதையே முதலீடாக வைத்து பின் அனுதாப அலையிலாவது மீண்டும் ஆட்சிக்கு வந்து கம்பெனியை உலகத்தின் முதல் பணக்கார (குடும்ப) கம்பெனியாக கொண்டுவந்திருக்கலாம்.

எப்படியும் 2011 ஆட்சி இல்லை. தெரிந்தும் கம்பெனியை படுபாதளத்தில் வீழ்த்துகிறார்.சரி, பதவி விலகினால் இலங்கைதமிழர் பிரச்சினை தீருமா?

தீராது. குறைந்தபட்சம் நமது எதிர்ப்பை பதிவு செய்யலாம். (நல்ல மதிப்பும் புகழும் கிடைத்திருக்கும்.) எதிர்கால கம்பெனியின் நலனுக்கும் உதவும்.

போட்டிக் கம்பெனியினரைப் பற்றி இவருக்கு ஏன் அக்கறை?

அவர்கள் வந்து பிரச்சினையை தீர்த்தால் என்ன? தீர்க்காவிட்டால் என்ன? அவர்களாலும் முடியாது, என்னாலும் முடியாது அதனால் நானே நாற்காலியில் கடைசிவரை இருந்துவிடுகிறேன் என குழந்தைத்தனமாக பிடிவாதம் பிடிப்பது எதற்கு? இதுவரை சம்பாதித்த பணம் போதவில்லையா?

போட்டிக்கம்பெனியினர்க்கு ஒரு வாய்ப்பை கொடுத்தால் என்ன? ஒன்று பிரச்சினையை தீர்க்கட்டும். அல்லது அவர்கள் கம்பெனியும் வளரட்டும்.

அதில் என்ன தவறு? ஓ. சம்பாதித்ததை காப்பற்றவேண்டிய கடமையை மறந்துவிட்டேன்.

குடும்பத்தலைவரின் சொத்து பணமானலும் சரி, வினையானலும் சரி
பிள்ளைகளுக்கு சேரும். பாவம் அனுபவித்துத் தானே ஆகவேண்டும்.

Saturday, May 9, 2009

ஆறிலிருந்து நூறுவரை ஆனந்தமாய் வாழ - நிகழ்ச்சி

பசிப் பிணியற்ற தமிழ்நாடு, நோயற்ற தமிழ்நாடு,

வளம் நிறைந்த தமிழ்நாடு, ஞானம் செறிந்த தமிழ்நாடு.

என்கிற இலட்சிய முழக்கத்தோடு வெளிவரும் கவனகர் முழக்கம் இதழின் ஆசிரியர் பதினாறு கவனகர் திருக்குறள் இராம.கனகசுப்புரத்தினம் அவர்களின் சிறப்பு நிகழ்ச்சி மலேசிய நண்பர்களின் கவனத்திற்காக.

ஞானப்பாதையை நம்க்கு அடையாளம் காட்டும் திருவிழா. கணத்துக்கு கணம் மாறுபட்ட அனுபவங்களை ஏற்படுத்தும் விழா. வாய்ப்பிருந்தால் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.


கலந்து கொண்டு பயன் பெறுங்கள். நிச்சயம் வாழ்க்கை குறித்து ஒரு ஆக்கபூர்வமான மாற்றம் வரும்.

Tuesday, May 5, 2009

வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்

இறையுணர்வு பெற்றவர்கள் இதுவரையில் தெளிவாக மொழி வழியிலும், பயிற்சி வழியிலும் கொடுத்துள்ள உண்மை விளக்கம் என்னவென்றால்,’சுத்தவெளியாகிய இறைநிலையே முடிவான அருட்பேராற்றலான தெய்வமாகும்’ என்பதாகும்.

சுத்தவெளியானது (1) வற்றாயிருப்பு, (2)பேராற்றல், (3)பேரறிவு, (4)காலம் என்கின்ற நான்கு வளங்களை உடையதாக இருக்கிறது.

வற்றாயிருப்பு

சுத்தவெளியாகிய பெருவெளியில் இருந்து அணு முதலாக அண்டங்கள் மற்றும் உயிரினங்கள் எவ்வளவு தோன்றினாலும் சுத்தவெளியோ, அதனுடைய ஆற்றலோ எந்த அளவிலும் குறைவுபடாது. இந்த உண்மையை விளக்குகின்ற வார்த்தைதான் வற்றாயிருப்பு ஆகும்

பேராற்றல்

பலகோடி சூரியக் குடும்பங்களை உடைய இந்த பேரியக்க மண்டலத்தில் உலவுகின்ற அனைத்தையும் இதே சுத்தவெளிதான் தாங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால் சுத்தவெளியை பேராற்றல் என்று கூறுகிறோம்.

பேரறிவு

எந்தப் பொருளிலும், எந்த இயக்கத்திலும் இதே சுத்தவெளிதான் ஊடுருவி நிறைந்து ஒழுங்காற்றலாக, செயல் புரிந்து வருகிறது. இந்த ஒழுங்காற்றல்தான் அறிவு என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு தோற்றத்திலும்,உருவ அமைப்பு,குணங்கள் மற்றும் காலத்தால் காலம் என்ற அதிர்வால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் அனைத்தும் நிகழ்கின்றன. இதனால் சுத்தவெளியானது பேரறிவு என்று விளக்கப்படுகிறது.

காலம்

சுத்தவெளியானது தன்னிறுக்க அழுத்தமாக உள்ளதால், அது தன்னைத்தானே விட்டுவிட்டு அழுத்தும்போது, அதுவே நுண்ணதிர்வாகச் செயல்புரிகிறது. இந்த நுண்ணதிர்வு என்ற காலத்தின் நுண்ணிய அலகானது கண்சிமிட்டும் நேரம்போல மிகக் குறைவானதாகும். இந்த
அதிர்வு இறைநிலையில் அடங்கி இருப்பதனால் எல்லாப் பொருள்களுக்கும் தோற்றம், வளர்ச்சி, முடிவு என்ற செயல்கள் உண்டாகின்றன. இதனால் இறையாற்றலை காலம் என்று சொல்கிறோம்.

ஆகவே இறையாற்றல் என்ற பெருவெளி வற்றாயிருப்பாக இருக்கிறது. பேராற்றலாக இருக்கிறது. பேரறிவாக இருக்கிறது. அதுவே காலமாகவும் இருக்கிறது.


இறைநிலை


வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் எனும்
வளம் நான்கும் ஒன்றிணைந்த பெருவெளியே தெய்வமாம்
வற்றாத இந்நான்கும் விண்முதல் ஐம்பூதங்கள்
வான்கோள்கள், உலகம், உயிரினம் ஓரறிவு முதல் ஆறாம்
வற்றாது பெருகிவரும் வளர்ச்சியே பரிணாமம்
வந்தவை அனைத்திலும் சீரியக்கம் இயல்பூக்கம்
வற்றாது பெருகும் பேரண்டத்தில் உயிர்வகையில்
வழுவாத செயல்விளைவு நீதியே கூர்தலறம் உண்மை,உண்மை

ஞானக்களஞ்சியம் பாடல் 1666

நன்றி ஆன்மீக விளக்கு தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

Thursday, April 30, 2009

ஞானக்களஞ்சியம் – பாடல்கள் 1

தெய்வத்தைப் பற்றிய கருத்து

தெய்வமென்ற கருத்தற்றோன் பாமரன் ஆம்

தெய்வமிலை என்போன் அச்சொல் விளங்கான்

தெய்வ மென்று கும்பிடுவோன் பக்தன், அந்தத்

தெய்வத்தையறிய முயல்வோனே யோகி,

தெய்வ நிலையுணர்ந்தவனே தேவனாம், அத்

தெய்வமே அனைத்துயிரும் எனும் கருத்தில்

தெய்வத்தின் துன்பங்கள் போக்கு தற்கே

தெய்வத் தொண்டாற்றுபவன் மனிதன் காணீர்


--வேதாத்திரி மகரிஷி


டிஸ்கி
: மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஞானக்களஞ்சியம் என்ற பாடல் தொகுப்பு நூலில் இருந்து அவ்வப்போது சில (தேர்ந்தெடுக்கப்பட்ட) பாடல்கள் இத்தலைப்பில் தொடர்ந்து வெளியிடப்படும்.

டிஸ்கி குன்னூர் போகலாம் வர்றீங்களா?

Tuesday, April 28, 2009

பெரியார், வள்ளலாருக்கு கொடுத்த மதிப்பு !

”கடவுள் இல்லை, வேதங்களை கொளுத்து, விநாயகர் சிலைகளை உடை’... ”என்பது போன்ற முழக்கங்களை ஒருபுறம் எழுப்பினாலும் மறுபுறம், ஏதேனும் ஓர் உயர்ந்த ஒழுக்க நெறியையும் மக்களுக்குக் காட்ட வேண்டும்’ என்ற எண்ணம் தந்தை பெரியார் உள்ளத்தில் இருந்தது.

அதனால் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். திராவிடர் கழக மாநாடு நடத்தும்போதெல்லாம் அதற்கு முதல்நாள் திருக்குறள் மாநாடு என ஒன்றை நடத்தித் திருக்குறளின் சிறப்புகளை அறிஞர்கள் வாயிலாகக் கூறச் சொல்லிக் கேட்க வைத்தார்.

வள்ளல் பெருமானின் சமரச சன்மார்க்கக் கொள்கை பெரியாருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு முறை வடலூர் சென்று சத்திய ஞானசபையை பார்க்கவேண்டும். அவரது கொள்கைகள் குறித்து விளக்கம் கேட்கவேண்டும் என விருப்பம் கொண்டார்.

அதன்படி ஒருமுறை தம் தொண்டர்கள் புடைசூழ வடலூருக்கு வந்துவிட்டார். சத்திய தருமச்சாலையின் அணையா அடுப்பையும், அங்கு நிகழும் அன்னதானப் பணிகளையும் பார்த்து முடித்தபின் சத்தியஞானசபையைப் பார்க்கவேண்டி அந்த வாசலுக்கு வந்தார்.

உடன் வந்தவர்கள் எல்லாம் ’திமுதிமு’வென்று ஞானசபை வளாகத்திற்குள் புகுந்துவிட்டனர். ஆனால் தந்தை பெரியாரோ பொறுமையாக ஞானசபையின் வெளியே உள்ள ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ச்சி செய்தபடி வாசலுக்கு முன் வந்தார்.

வந்தவர் ஞானசபையின் வாசலில் உள்ள கல்வெட்டில் இருந்த வாசகத்தைத் தம் மூக்கு கண்ணாடியை தூக்கிப் பிடித்தபடி படித்தார். அதில்,

’கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டும் உள்ளே செல்லவும்

என்ற வாசகம் வள்ளல் பெருமானால் எழுதப் பெற்றிருந்தது. உடனே வழிகாட்டியாளராய் அருகில் நின்றிருந்த ஊரன் அடிகளாரிடம்,”இது என்ன?” என்று கேட்டார் பெரியார்.

"கொலை செய்யாதவர்கள், புலால் உண்ணாதவர்கள் மாத்திரம்தான் உள்ளே செல்ல வேண்டும் என்று அய்யாவே எழுதச் சொன்ன வாசகம்” என்று ஊரன் அடிகள் பதில் சொன்னார்

”அப்படியா? அப்ப உள்ளே செல்லும் அருகதை எனக்கில்லை. ஏனென்றால் நான் புலால் உண்ணுபவன்” என்று கூறியபடி அய்யா உள்ளே நுழையாமல் திரும்பினார்.

உடனே ஊரன் அடிகள் ”அதனால் ஒன்றும் தவறில்லை அய்யா. எழுதிப் போட்டிருக்கிறதே தவிர யாரும் அதைப் பின்பற்றுவதில்லை. பேரறிஞர் அண்ணா,கலைஞர் என எல்லோருமே வந்திருக்கிறார்கள். உள்ளே போய்ப் பார்த்திருக்கிறார்கள்.” என்று கூறினாராம்.

உடனே தந்தை பெரியார் சொல்லும் செயலும் ஒன்றாய் இருப்பதுதான் உண்மையான ஒழுக்கம். அவர் வாழும்போது அவர் கட்டளையை அவரது ஒப்புதலுடன் மீறினால் கூடத் தவறில்லை. அவர் இல்லாதபோது அவரது கட்டளையை மீறுவது அறிவு நாணயம் இல்லை. அத்தகைய தவறை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்” என்று கூறியபடி சத்திய ஞானசபையை பார்க்கமலேயே புறப்பட்டு விட்டாராம்.

இந்த நிகழ்ச்சியை கோவை ஆர்.எஸ்.புரம் மரக்கடை வசந்தம் அய்யா
கூறியதாக கவனகர் முழக்கம் ஏப்ரல் இதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

தலைவர் என்பவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு பெரியார் ஒரு உதாரணம். அவர் வழி வருபவர் எப்படி இருக்கக்கூடாது, அல்லது தலைவர் கடைபிடிப்பது பின்னர் எப்படி எல்லாம் மாறிவிடுகிறது என்பதற்க்கு இந்த விஷயத்தில் மட்டும் பேரறிஞர் அண்ணா, கலைஞர், மற்றும் பிற ஆன்மீக அன்பர்கள் உதாரணமாக இருக்கிறார்கள் என்பதற்க்கு இந்நிகழ்ச்சி ஓர் நல்ல உதாரணம்.

நன்றி: கவனகர்முழக்கம் ஏப்ரல் மாத இதழ்

Monday, April 27, 2009

கடவுளும்..நல்ஒழுக்க உறவும்..அன்பான உறவும்

‘கடவுளை இவர்கள் கண்டு கொள்வதில்லை. ஆனால் கடவுளோ இவர்களைக் கண்டு கொள்வார்!’

என்னும் மூன்றாம் வகை உறவே நல்ஒழுக்க உறவு.

பகவான் புத்தர், மகாவீரர், கபிலதேவர் போன்ற மகான்களே இந்தப் பட்டியலில் உள்ளவர்கள்.

இவர்கள் கடவுளைப் பற்றிப் பேசவில்லை; புகழவில்லை; கடவுள் நம்பிக்கையும் வைத்திருக்கவில்லை. ஆனால் கடவுளுக்கு உகந்த உண்மை, அன்பு, தியாகம், ஜீவகாருண்யம், தொண்டுள்ளம், பொறுமை, ஆணவமின்மை உள்ளிட்ட சகல நல் ஒழுக்கங்களையும் கடுமையாய்ப் பின்பற்றி நோன்பிருந்தார்கள்.

இவர்கள் கடவுளைக் கண்டு கொள்ளாவிட்டாலும், கடவுள் இவர்களைக் கண்டுகொண்டார். அதனால்தான் அவர்களுக்கு ஞானமும் வாய்த்தது.சமாதியும் வாய்த்தது. இந்த வழி போற்றுதலுக்குரிய வழி. தாரளமாய் இந்த வழியில் நாம் பயணிக்கலாம்.

நான்காம் வகை ; அன்பான உறவு

‘கடவுளை இவர்கள் நேசிக்கின்றனர், கடவுளும் இவர்களை நேசிக்கின்றார் !’

என்னும் நான்காம் வகை உறவே அன்புவழி உறவு. இருப்பதில் உயர்ந்த உறவு. உத்தமான உறவு.

வள்ளல் பெருமான், பட்டினத்தடிகள், சைவ நாயன்மார்கள், சித்தர்கள் எனப் பலரும் பின்பற்றிய உறவு இது.கடவுள் விரும்பும் அனைத்து நல் ஒழுக்கங்களையும் வைத்திருந்து தவம் செய்து உயர்வடைந்தவர்கள். அதே வேளையில் கடவுளைப் புகழ்ந்து போற்றிப் பாடுவார்கள்.

தன்னை கடவுள் என்றும், அவதாரம் என்றும் பிரகடனம் செய்ய மாட்டார்கள். தன்னைச் சுற்றி புகழ்வதற்கென்று கூட்டம் கூட்ட மாட்டார்கள். மக்களோடு மக்களாய் எளிமையாய் வாழ்வார்கள்.

’திருநீறு வர வைக்கிறேன். எலுமிச்சம்பழம் வர வைக்கிறேன்’ என்பதுபோல் அல்ப சித்துக்களைக் காட்டிப் பாமரர்களை ஏமாற்ற மாட்டார்கள்.

’என்னிடம் பணம் கட்டிப் பாதபூஜை செய்தால் வினைகள் தீர்ந்துவிடும்’ என்பதுபோல் பொய் பிரகடனம் செய்ய மாட்டார்கள்

’தான் மட்டுமே குரு. நீ எந்நாளும் சீடன்தான் !’ என்பது போல் அடிமை வம்சத்தை உருவாக்க மாட்டார்கள்.

‘நின் கடன் அடியேனையும் தாங்குதல். என் கடன் பணி செய்து கிடப்பதே!’ என்ற அப்பர் சுவாமிகளின் திருவாக்குப்போல் அடக்கமாய், எளிமையாய், மறைவாய், தனியாய் வாழ்வார்கள்.

இருப்பதில் உயர்ந்த நிலையை எய்தும் வல்லமை இவர்களுக்கே உண்டு. இவர்களை பின்பற்றுவோர் தாரளமாய் கடைத்தேறலாம்

இந்த நால்வரில் நீங்கள் யார் ?

நீங்கள் யார் என்பதையும், எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உணருங்கள். யாராக வேண்டுமானாலும் மாற உங்களுக்கு உரிமையும் தகுதியும் சுதந்திரமும் உண்டு முடிவு செய்யுங்கள் செயல்படுங்கள்.

நன்றி; கடவுளைக் கண்டோம்! காட்டவும் வல்லோம்! ஞானதேவபாரதி சுவாமிகள் அவர்களின் நூலில் இருந்து